கடன் படாதீர் இளையோரே

கடன் படாதீர் இளையோரே
Updated on
1 min read

இந்தியாவில் 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் கடன் பெறுவதாக ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ எனும் கடன் தகவல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கு முன்புவரை 38 சதவீதம் இந்திய இளைஞர்கள் கடன் வாங்கியதாகவும் தற்போது 43 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் நாட்டின் கடன் வளர்ச்சி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் இந்த பட்டியலில் இல்லை என்றாலும் 18 வயதை எட்டிய பலர் இதில் இடம்பெற்றிருப்பது கவனத்துக்குரியது.

உலகமயமாக்கல், 90களில் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்து 2000-க்கு பிறகு சாதாரண மக்களின் அன்றாடத்துக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்புவரை நிலைமை முற்றிலும் வேறு. குறிப்பாகத் தமிழ்ச் சமூகம், கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடல்வழி வாழ்ந்து வந்த சமூகமாகும். கடன் அன்பை முறிக்கும் என்று சொல்லாதவர்கள் அன்று இல்லை.

இன்றோ வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப் பொருட்கள் கடன் என பெரும்பாலான மக்களிடம் புழங்கும் அத்தனையுமே கடனாக பெறப்பட்டவையாக உள்ளன. அதிலும் கிரெடிட் கார்ட் பயன்பாட்டினால் தனது சக்திக்கு மீறி பொருட்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கண்ணுக்குத் தெரியாமல் அதீத நுகர்வு கலாச்சாரமும் நம்மிடையே பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் இன்றைய மாணவச் சமூகத்தினரிடம் கடன் படாதீர் என்று சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் இன்றியமையாத கடமையாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in