

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உள்ள ஈரநிலத்தில் சராசரியாக ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு அபாயகரமான ரசாயனங்கள் கொண்ட 1,758 நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேதனைக்குரிய செய்தி உலக சதுப்புநிலங்களின் நாளான நேற்று வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் சதுப்புநிலங்கள் அழிவை தடுப்பதற்கான ‘ராம்சர்’ பட்டியலில் கடந்த ஆண்டுதான் பள்ளிக்கரணை இணைக்கப்பட்டது. இதன் மூலம் எண்ணற்ற பறவைகளின் புகலிடமான பள்ளிக்கரணை பாதுகாக்கப்படும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
ராம்சர் பட்டியலில் ஓர் ஈரநிலம் வந்துவிட்டால் அந்த ஈர நிலத்தை வேறெதற்கும் நாம் பயன்படுத்த முடியாது, இதற்காக ஒரு மேலாண்மை திட்டத்தை உருவாக்கி, அந்த மேலாண்மை திட்டத்தில் கூறப்படும் பரிந்துரைகளை எல்லாம் அந்த ஈரநிலப் பகுதியில் அமல்படுத்த வேண்டும். ராம்சர் பட்டியலில் இணைக்கப்பட்ட ஈரநிலங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சர்வதேச அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
உண்மையில் புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் வாழ்விடங்களைச் சூறையாடுவதைத் தடுத்து காப்பவை சதுப்புநிலங்கள். அத்தகையதொரு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் சாக்கடை கலப்பது, குப்பை கொட்டுவது, தொழிற்சாலைகளின் கழிவுகளை வெளியேற்றுவது, குப்பை கிடங்காக மாநகராட்சியே மாற்றுவது போன்ற நாமே நம் தலையில் மண்ணை வாரி இறைத்துக் கொள்ளும் தீச்செயலை தடுத்து நிறுத்தாமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?