

மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி எஸ்.தபித்தா தேசிய அளவிலான 14 வயது பிரிவினருக்கான சைக்கிள் சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கோயம்புத்தூர் குட்டையூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தபித்தா. ஏழ்மையில் வாடிய குடும்பத்தை தந்தை கைவிட, தாய் ஓமன் நாட்டில் வீட்டுவேலை செய்து வருகிறார். அதுவரை தனியார் பள்ளியில் படித்து வந்த தபித்தா 10-ம் வகுப்பில் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஏற்கெனவே பல்வேறு சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றவர் மேற்கொண்டு செய்வதறியாமல் பரிதவித்தார். தனது கல்வி என்னவாகுமோ என்கிற அச்சமும், தனது விளையாடு லட்சியம் நிறைவேறுமா என்கிற பதற்றமும் தபித்தாவை சூழ்ந்தது.
இந்நிலையில், சைக்கிள் ஓட்டத்தில் முன்னேறத் தேவையான சிறப்புப் பயிற்சியை தபித்தாவுக்கு இலவசமாக வழங்க திருவனந்தபுரத்தில் உள்ள லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி பயிற்சி கல்லூரி ஒப்புக் கொண்டது. மறுபுறம் தபித்தாவின் கனவை நனவாக்க மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தபித்தாவுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்திவருகின்றனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சைக்கிள் பந்தயத்துக்குரிய ரூ.20 லட்சம் மதிப்பிலான சைக்கிளை இந்திய விளையாட்டு ஆணையம் தபித்தாவுக்கு போட்டி நேரத்தில் ஓட்ட வழங்கியது. சிறுவயதில் தந்தை கைவிட்டாலும், தாய் தூர தேசத்தில் துவண்டாலும் தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் இறுகப்பற்றிக் கொண்டு தேசிய அளவில் தங்கம் வென்று இன்று தலைநிமிர்ந்து நிற்கும் தபித்தா மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரி.