

4.14 கோடி இந்திய மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்திருப்பது 2020-2021-ம் ஆண்டுக்கான உயர் கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இளநிலை கலை பட்டப்படிப்புகளில் சேர்ந்துள்ளது இதில் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பி.எஸ்சி. எனும் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளில் 49.12 லட்சம் மாணவர்கள் இணைந்துள்ளனர்.
பி.ஏ., பி.எஸ்சி. ஆகிய இரண்டு பட்டப் படிப்பு பிரிவுகளிலும் மாணவிகளின் எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் கூடுதலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பி.ஏ. பட்டப்படிப்புகளில் 52.7 சதவீத மாணவிகளும், 47.3 சதவீத மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
அதுமட்டுமல்ல முதுநிலை அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிடவும் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கழுகுப்பார்வையில் அணுகும்போது இது நல்ல சமிக்ஞையாக தோன்றலாம். மறுபுறம் பி.இ., பி.டெக்., படிப்புகளில் மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அப்படியானால் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் படிப்புகளில் இன்றும் பெண் குழந்தைகள் குறைவான எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவது வருந்தத்தக்கது. அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு என்கிற காலம் மலையேறிப் போய்விட்டது. ஆனாலும் தொழில்நுட்பமும் மாணவிகள் வசப்படும் காலம் விரைவில் வந்தாக வேண்டும்.