

‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை பார்க்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மத்திய திரைப்பட தணிக்கை துறை நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரையிடப்படுவதற்கு முன்னதாக திரைப்படங்களுக்கு மத்திய அரசு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குகிறது. இதில் ‘யு’ பெற்ற படங்கள் அனைவரும் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ‘யுஏ’ இருப்பின் 12 வயதுக்கு உட்பட்டோர் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பார்க்கலாம்.
‘ஏ’ என்று முத்திரைகுத்தப்பட்ட திரைப்படத்தை காண 18 வயதுக்கு உட்பட்டவர்களை திரையரங்கில் அனுமதிப்பது திரையிடுதல் சட்டப்படி குற்றமாகும். ஆனால், இந்த சட்டத்தை பல திரையரங்குகள் மதிப்பதில்லை. இதனை சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்கூறிய ஆணை பிறப்பித்துள்ளது.
திரையரங்கிற்கு வெளியிலும் இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் இக்கட்டில் இன்றைய ஒட்டுமொத்த சமூகமும் உள்ளது. ஏனெனில் தொலைக்காட்சி, ஓடிடி தளம், யூடியூப் உள்ளிட்ட ஊடகங்களின் ஊடாக அதீத வன்முறை, பாலியல் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் கட்டற்ற முறையில் நமது குழந்தைகளின் மனநலம் மீது எதிர்மறை தாக்கத்தைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், குழந்தைமையை சிதைக்காத சினிமாவை மட்டும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதை அரசு துறைகள் மட்டுமல்லாது பெற்றோர், திரையரங்கு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது பொறுப்பாக ஏற்க வேண்டும்.