

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நூலகர் பாலம் கல்யாண சுந்தரத்துக்கு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அளப்பரிய பங்காற்றியவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருதாளர்களில் ஒருவராக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாலம் கல்யாணசுந்தரம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நூலக அறிவியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இவர் 23 வயதிலேயே தேச எல்லை காக்கும் ராணுவ வீரர்களுக்கு 8.5 தங்கச்சவரனைக் கொடையாக அளித்தவர்.
தேசியப் பாதுகாப்பு நிதிக்கு நாட்டுப்பற்றுடன் உதவிய பாலம் கல்யாணசுந்தரத்தை 1963-ல் அன்றைய தமிழ்நாடு முதல்வர் காமராஜர் மனம் திறந்து பாராட்டினார். பிறகு கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் நூலகராக பணியில் கல்யாணசுந்தரம் சேர்ந்தார்.
35 ஆண்டுக்கால நூலகர் பணியில் தனக்கு கிடைத்த முழு ஊதியத்தையும் தானமாக அளித்துவிட்டு வாழ்வாதாரத்துக்கு சின்ன சின்ன வேலைகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கே மலைத்துப்போனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய மனிதாபிமானத்துக்கு வெகுமானமாக வழங்கப்பட்ட ரூ.30 கோடியையும் வாரிவழங்கிவிட்டாராம்.
நாட்டின் பெருமைக்குரிய டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள ஒரு சர்வதேச அமைப்பு, தமிழ்நாடு அரசு, பஞ்சாப் அரசு என பாராட்டு மழையால் நனைந்தாலும் சமூக சேவையே தனது பணியென வாழும் தன்னலம் துறந்த நூலகருக்கு பத்ம விருது மேலும் கவுரவம் சேர்த்திருக்கிறது.