

அரசு பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் தனி பயிற்சி மையங்களுக்கு சென்று மாதந்தோறும் ரூ.1500 வரை கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையின் தேனாம்பேட்டை, தியாகராய நகர், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசை வாழ் மக்களிடத்தில் தன்னார்வ நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது.
கணக்கெடுப்பில் பங்கேற்ற பெற்றோர் அனைவருமே தினக்கூலி தொழிலாளர்கள் என்பதால் இலவச கல்வி வழங்கும் அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்துவிட்டாலும் ஆசிரியர்கள் முறையாக கற்பிக்க தவறுவதால் தனி பயிற்சி மையங்களுக்கு செலவழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வீட்டுப்பாடத்தை சுயமாக எழுதி முடிக்கும் அளவுக்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் கேரளா, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் எட்டியிருக்கும் உயரத்தை தமிழக பள்ளிகளும் அடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டும் போதாது. அன்பாசிரியர்களை உருவாக்க அரசு மெனக்கெட வேண்டியுள்ளது.
படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிச்சிடும் என்று சொல்லியே இன்னும் எத்தனை காலம்தான் குழந்தைகள் மீதே பழியை சுமத்திக்கொண்டிருக்கப் போகிறோம்? அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்கிற கூற்றை மெய்ப்பிக்க முதலில் அரசு பள்ளி ஆசிரியர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.