நீங்களும் இந்நாட்டின் மன்னர்களே

நீங்களும் இந்நாட்டின் மன்னர்களே
Updated on
1 min read

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுத்தறிவு பெற்ற முதல் இந்திய மாவட்டமாக கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் அண்மையில் தேர்வாகி உள்ளது. அதில் ரெஜி என்கிற பெண்மணி முதல் இடத்தை பெற்றுள்ளார்.

நாட்டின் குடிமக்களுக்கு சட்டமும் உரிமைகளும் கற்பிக்கும் தொலை நோக்குப் பார்வையுடன் கொல்லம் மாவட்ட பஞ்சாயத்து வாரிய திட்ட கமிட்டியும் கேரளா உள்ளூர் நிர்வாக அமைப்பும் சேர்ந்து முன்னெடுத்த முயற்சிக்கான வெற்றி இது. இதற்கென கடந்த ஆண்டு 2,200 சட்ட பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், ஆட்டோ நிறுத்தங்கள், பழங்குடியினருக்கான மையங்களுக்கு சென்று விழிப்புணர்வு பயிலரங்குகள் ஏழு மாத காலத்துக்கு நடத்தினர். பின்னர் நடத்தப்பட்ட அரசியலமைப்பு தேர்வை அம்மாவட்டத்தைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரெஜி முதல் இடத்தை கைபற்றியுள்ளார்.

நாளை மறுநாள் 74-வது குடியரசு தினம் கொண்டாடப்படவிருக் கிறது. இந்நாளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது வழக்கம். அதிலும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை பல பள்ளிகள், கல்லூரிகளில் வாசிக்கப்படுவதும், அதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே என்பதை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தும் அரசியலமைப்பை வெறும் ஒருநாள் கொண்டாட்டத்துக்கான விஷயமாக கருதிவிட்டு கடந்து போய்விடலாகாது. மாணவர்கள் உளப்பூர்வமாக அதனை உள்வாங்க தமிழ்நாட்டிலும் அரசியலமைப்பு சட்டத்தில் எழுத்தறிவு ஊட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in