

சென்னை பெருநகரின் மூன்று முக்கிய நீர்நிலைகளான அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் முற்றிலுமாக எந்த உயிரினமும் தழைக்க முடியாத அளவுக்கு மாசடைந்துவிட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் ஓடக்கூடிய முக்கிய ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் அடையாறு, கூவம் நதிகளில் துளி அளவும் ஆக்சிஜன் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அவற்றில் ஓடும் தண்ணீர் பாஸ்பேட்ஸ், சோடியம், நைட்ரேட்ஸ், சல்பேட்ஸ், ஆர்த்தோபாஸ்பேட், ஃப்ளூரைட், உலோகம் உள்ளிட்ட நச்சுத்தன்மை நிறைந்த இரசாயன கலவைகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் இவற்றில் உள்ள கழிவு நீரை சுத்திகரித்தும் பயனில்லை என்றும், அந்த கழிவு நீரில் சிறு புல் பூண்டு, நுண்ணுயிர்கள்கூட ஜனிக்க வாய்ப்பில்லை என்றும் தெரியவந்துள்ளது. இது தெரிந்த கதைதானே என்று இளம் தலைமுறையினருக்கு தோன்றக்கூடும்.
இன்று துர்நாற்றம் வீசி, நம்மை முகம் சுளிக்கவைக்கும் இவை அரைநூற்றாண்டுக்கு முன்புவரை சென்னையின் காவிரி என்றே சொல்ல வேண்டும். தூய நீர் பாய்ந்த இந்த ஆறுகளில் மீன்பிடி தொழிலும், படகுப் போட்டிகளும் நடைபெற்றன. அதிலும் தமிழகத்தில் வர்த்தகம் செய்வதற்காக ரோமாபுரி மன்னர்கள் கூவம் ஆற்றின் குறுக்கே பயணம் செய்ததாகக் கூட வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. நதிகளை நாசப்படுத்தி சாக்கடையாக்கியது யாரோ அல்ல நாம்தான். இதிலிருந்து மீள இனி என்ன செய்யப்போகிறோம்?