

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி முதன்முறையாக நடைபெற்றுவருகிறது. தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும்; பிற நாடுகளில் இருக்கக்கூடிய அதிசிறந்த இலக்கியங்களை தமிழுக்கு கொண்டுவர முன்மாதிரி முயற்சிஇது. இந்த மொழிபெயர்ப்பு திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
30 நாடுகளின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும், பிரபல பதிப்பகங்களின் புத்தகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி அந்நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள், எழுத் தாளர்கள் புத்தகக் காட்சியில் பங்கேற்கின்றனர். பொதுமக்களுக்கும் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி உண்டு. அதேநேரத்தில் இங்கு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவில்லை.
முக்கியமாக தமிழ் முற்றம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல புத்தகங்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு மகுடம் சூட்டும் விதமாக பிரமாண்டமான திருக்குறள் புத்தகம் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதில் 106 திருக்குறள்கள் 106 மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் கூடியிருக்கும் அயல்நாட்டவர்கள் கடந்த இரண்டு நாட்களாக பிரமிப்புடன் திருக்குறளை வாசித்து விதந்தோதி வருகின்றனர். ஆனால், வருந்தத்தக்க வகையில் இங்கு வரக்கூடிய பொதுமக்களில் சிலர் புத்தகங்களை திருடுவது, அயல்நாட்டு பதிப்பாளர்களிடம் இலவசமாக புத்தகம் கேட்பது என்பது சிக்கலாக மாறியுள்ளது. உயிரைக் காட்டிலும் மேலானது ஒழுக்கம் என்று உலகிற்கு வள்ளுவர் சொல்லித் தந்த குறளை நாமும் மனதில் ஏந்துவோம்.