

தமிழ்நாட்டுக்கு உட்பட்ட 43% கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஆயிரம் (991.5) கி.மீ.வரை நீண்டிருக்கும் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு குறித்து கடந்த 1990-2018-ம் ஆண்டுவரை விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுதான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் சுனாமி (2004) தொடங்கி நிஷா புயல் (2008), ஜல் புயல் (2010), தானே புயல் (2011), நீலம் புயல் (2012), சென்னை பெருவெள்ளம் (2015), வர்தா புயல் (2016), ஒக்கி புயல் (2017), கஜா புயல் (2018) என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் தமிழ்நாட்டை இடைவிடாது பதம்பார்த்துவிட்டன.
இதனால் கடற்கரை பகுதியில் கடுமையான மணல் அரிப்பு, சூழலியல் சீரழிவு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இயற்கை சீற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும் பாதிப்புக்கு முழு பொறுப்பல்ல. சொல்லப்போனால் மனிதகுலம் இயற்கையை சுரண்டுவதினால்தான் புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் அதன் விளைவாகவே சுனாமி, புயல் உள்ளிட்டவை அதிகரித்துவருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுபோக துறைமுகங்கள் கட்டுவது, சொகுசு விடுதிகளை செயற்கையாக ஏற்படுத்துவது, மணல் திருட்டில் ஈடுபடுவது போன்ற இயற்கைக்கு புறம்பான காரியங்களில் மனித இனம் தனது வளர்ச்சிக்காகவும் சுயநலத்துக்காகவும் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்துள்ளது. இனியேனும் அறத்துடன் நடந்து கொண்டு இயற்கையின் அறச்சீற்றத்தில் இருந்து தப்பிக்க முயல்வோம்.