

வெளி மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை சென்னை மந்தைவெளி பகுதியில் குழந்தைத் தொழிலாளராக பணியில் அமர்த்தியவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார் குழந்தைகள் நலக்குழுவிடம் அவரை ஒப்படைத்தனர்.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகப் பெரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை கரோனா காலத்தில் உயிர்ப்பித்தெழுந்து தலைவிரித்தாடுகிறது. நாடெங் கிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் செயல்படத் தொடங்கிய பிறகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளி திரும்பவில்லை. அவர் களில் பலர் அக்கம்பக்கத்திலிருக்கும் குடிசைத்தொழிலிலும், கடை வேலைகளிலும் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக பல பெண் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது வெளி மாநிலங்களில் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்குச் சட்டமும் ஒருவகையில் துணைபோகிறது. ஏனெனில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை பணியில் அமர்த்துவது குற்றம் என்றிருந்த சட்டத்தில் அபாயகரமற்ற தொழில்களில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களை அமர்த்தலாம் என்ற திருத்தம் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இது மீண்டும் குழந்தைத் தொழிலாளர் முறை தலைதூக்க மறைமுகமாக வழிகோலுவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு, யூனிசெப் உள்ளிட்டவை தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை தற்போது மீட்கப்பட்டிருப்பினும் குற்றவாளிக்கு 30,000 ரூபாய் அபராதம் போதுமான தண்டனை அல்ல. குழந்தைத் தொழிலாளர் முறை பெருங்குற்றமாக கருதப்பட்டு, 18 வயதுவரை குழந்தைகளே என சட்டம் திருத்தப்பட அரசு ஆவன செய்ய வேண்டும்.