

2022-ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான 30,957 குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய மகளிர் ஆணை யத்தில் புகார்கள் பதிவாகியுள்ளது. இவற்றில் 6,900-க்கும் மேற்பட்டவை குடும்ப வன்முறை சம்பவங்கள். 2021-ஐ விடவும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
வரதட்சிணை கொடுமை சட்டப்படி குற்றமென அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்தும் வரதட்சிணை மரணங்களும், துன்புறுத்தல் சம்பவங்களும் பரவலாகப் பதிவாகி உள்ளது பெருத்த தலைக்குனிவு.
இன்றும், பெண்ணுக்கு எதிரான குற்றம் பொது இடங்களில் நிகழ்த்தப்படும்போதெல்லாம் நீ ஏன் அந்த உடை அணிந்தாய்? நீ ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றாய்? என்பது போன்ற கேள்விகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியே வீசப்படுகிறது.
இதில் கொடுமை என்னவென்றால் வீதிகளை விடவும் நமது வீடுகளில்தான் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. வீதியில் கூட பெண்களுக்கு எதிரான பெருவாரியான கொடுமைகள் நன்கு பரிச்சயமான நபர்களினால்தான் நிகழ்த்தப்படுகிறது. இதற்குக் காரணம் பாலின சமத்துவம் நமது வீடுகளிலும், பள்ளிகளிலும் போதிக்கப்படுவதில்லை.
பாலின சமத்துவத்தை மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இணைப்பதினால் மட்டும் அதன் நோக்கம் நிறைவேறிவிடாது. முதலில் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதன் வழியாகப் பெண்ணை மதிக்க வீடுகள்தோறும் மகன்களுக்குச் சொல்லித்தரப்பட வேண்டும்.