

சென்னை புத்தகக் காட்சி இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. இந்த வாய்ப்பை மாணவர், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் இம்முறை 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் அறிவியல், பொது அறிவு, கதைகள் உள்ளிட்ட வகை வகையான புத்தகங்கள் இடம்பெறும். இந்த அரங்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பதிப்பாளர்கள் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த அரங்கில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களாகிய உங்களால் வாங்கிவிட முடியாதுதான். ஆனாலும் நிச்சயமாக நிறைய புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்க்க முடியும். தமிழக பதிப்பாளர்கள் தமிழில் வெளிக்கொணரும் புத்தகங்களை தாண்டி பலவகைப்பட்ட நூல்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்கிற புரிதலை பெற இது உங்களுக்கு மிகவும் உதவும்.
முக்கியமாகப் பாடத்திட்டத்துக்கு அப்பால் உள்ள அறிவு உலகம் எத்தனை விசாலமானது, சுவாஸ்யமானது என்பதை உணர இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். இன்னும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இப்புத்தகத் திருவிழா நடைபெறவிருப்பதால் சென்னையில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களும் கல்வி சுற்றுலாவாக தங்களது பள்ளி மாணவர்களை இந்த புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வரலாம்.