

1.4 கோடிக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் வேலை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. பொது மக்களின் பொருளாதார வாழ்க்கையில் கரோனா பெருந்தொற்று காலம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார தகவல் மையமும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன.
இதில் கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய மக்களிடம் காணப்பட்ட பணப்புழக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. ஜனவரி 2020 முதல் அக்டோபர் 2022 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.3 %- ஆக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
மறுபுறம், கரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 15-39 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் 20% வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. அதுவே 40-59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கோ 12% வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இளையோருக்கு வேலை கிடைப்பதில்லையா என்று பதற்றம் எழக்கூடும்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கை 1.3 கோடியாக உயர்ந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கரோனா காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை இழந்தனர்.
அந்த நிலையிலிருந்து நிச்சயம் பெருவாரியானவர்கள் மீண்டு வந்திருக்கிறார்கள். ஆகையால், தற்போது பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்து எங்கிருக்க வேண்டும் என்று இப்போதிலிருந்தே திட்டமிடுங்கள்.