உடற்பயிற்சி ஆசிரியர்கள் உண்டா?
செங்கல்பட்டு மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15 கோடி 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் தமிழகத்தை உலக அரங்கில் தலைநிமிரச் செய்யும் வகையில் விளையாட்டு வீரர், வீராங்கனைக்கு உரிய பயிற்சி அளித்து, விளையாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் விளையாட்டு மைதானங்களோ, தகுதி வாய்ந்த விளையாட்டு ஆசிரியர்களோ தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் இல்லை என்பதுதான் சுடும் உண்மை.
அப்படியே மைதானமும் ஆசிரியரும் இருப்பினும் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் விளையாட்டு வகுப்பு நேரம் பாட வகுப்பு நேரமாக பறிக்கப்பட்டுவிடுகிறது. விளையாட்டு வீரர்களாக மாணவர்கள் உருமாறி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வது இருக்கட்டும். ஒவ்வொரு குழந்தையும் உடல் மற்றும் மன நலத்துடன் வளர்ந்திடவே விளையாட்டுகள் அத்தியாவசியம்.
இந்நிலையில் விளையாட்டு மைதானமும், விளையாட்டு உபகரணங்களும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் இருப்பதை உறுதிப்படுத்திட சொல்கிறது கல்வி உரிமை சட்டம். இதனை மையபடுத்தி சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனாலும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் முழுநேர அடிப்படையில் பள்ளிகள் தோறும் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து சட்டமோ, நீதிமன்றமோ, அரசோ இதுவரை வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் முழுநேர உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
