

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மனநலம் பேண சோதனை முயற்சியாக மனநல ஆலோசனை பயிலரங்கம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சிறப்பு மனநல ஆலோசனை பயிலரங்கம் இம்மாதம் நடத்தப்பட விருக்கிறது. மாணவர்களிடையே நடத்தை கோளாறு அதிகம் காணப்படும் 25 பள்ளிகள் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட உள்ளன. அவற்றில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி, அவசியப்பட்டால் மனநல ஆலோசகர் வழிகாட்டுதல் உள்ளிட்டவை வழங்கப் படவிருக்கிறது.
ஆசிரியர்-மாணவர் இடையில் சுமுக உறவை பேணுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல் ஆசியர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது. ஆய்வு முடிவுகளைப் பொருத்து 2024-ல் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மனம் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவகல்லூரிகளில் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சோதனை முயற்சியாக மனநல பயிலரங்கம் நடத்த முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
கரோனா காலம் மாணவர்களிடத்தில் கற்றல் இடைவெளியை உண்டாக்கியதுபோலவே மனநல இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போதை பழக்கம், மனச்சோர்வு, டிஜிட்டல் போதை, ஒழுக்கச் சீர்கேடு போன்றவற்றால் தடம் புரளாமல் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் லட்சிய நோக்குடன் படித்து முன்னேற மனநல ஆலோசனை நிச்சயம் கைகொடுக்கும்.