

அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்து பரபரப்போ, பதற்றமோ இல்லாத விடுமுறை நாட்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கின்றன. இனி என்ன செய்யலாம்?
நீங்கள் ஆசைப்பட்ட விளையாட்டை ஆடலாம், திரைப்படங்களை காணலாம், பிடித்தமான நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவிடலாம். அதுதவிர வேறென்ன செய்யலாம்? அரையாண்டு தேர்வுகள் மட்டுமல்ல இந்த ஆண்டே நிறைவுக்கு வந்துவிட்டதே. புத்தாண்டு பிறக்கப் போகும் இவ்வேளையில் நீங்களும் புதிதாய் உதித்தெழலாமே! எப்படியும் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தாண்டு குறிக்கோள் இருக்கும். அதனுடன் இன்னொன்றையும் முயன்று பார்ப்போமா மாணவர்களே.
வரவிருக்கும் 2023-ல் உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் பன்முக அறிவுத் திறன்களை கண்டறிந்து, அவற்றை வெளிக்கொண்டு வர திட்டமிடுங்கள். உதாரணத்துக்கு மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, பாடப்புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றை அட்டகாசமாக செய்யக் கூடியவர்கள் புத்திசாலி என்றழைக்கப்படுகின்றனர்.
இவை மட்டுமல்ல உண்மையில் இசைத் திறன், விளையாட்டுத் திறன், மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், இயற்கை சார்ந்த திறன் உள்ளிட்ட ஒன்பது விதமான அறிவுத் திறன்கள் கொண்டவர்களும் புத்திசாலிகளே என்று நிரூபித்துள்ளார் ஹாவர்ட் கார்டனர் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர்.
ஆம்! இவை அனைத்தும் நம் மூளையில் குடிகொண்டிருக்கும் திறன்களே. ஆனால் என்ன அவற்றை நாம் இதுவரை திறனாக அங்கீகரிக்கவில்லை அவ்வளவுதான். இந்த ஒன்பது நாட்களில் உங்களுக்குள் கூடுதலாக இருக்கக் கூடிய புதிய திறன்களை கண்டுபிடித்து 2023-ல் வளர்த்து ஜொலிக்க முயலுங்கள்.