

பள்ளி நேரத்தில் சென்னை மாநகரில் குப்பைகளை லாரிகள் அள்ளிச் செல்வதை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மாநகரில் குப்பை அள்ளிச் செல்லும் லாரிகளில் இருந்து வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது, குப்பை லாரிகளின் பின்னால் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணம்செய்ய முடியாத நிலை உள்ளதால் காலை 7-10, மாலை 4-7ஆகிய பள்ளி, அலுவலக நேரத்தில் சென்னை மாநகருக்குள் குப்பை லாரிகள் இயக்க தடை விதிக்க கோரி வழக்குதொடுத்தார் ஒருவர். வழக்கை விசாரித்த நீதிபதி குப்பைலாரிகளை இயக்குவதற்கான நேரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றார்.
இந்த வழக்கை நமது கோணத்திலிருந்து மட்டுமே அணுகினால் நியாயமானதாகத் தோன்றும். ஏனெனில் காலை நேரத்தில் மாணவர்களாகிய நீங்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போதும், உங்களது பெற்றோர் அலுவலகத்துக்குப் பரபரப்பாக செல்லும்போதும் குப்பை லாரிகள் குறுக்கும்மறுக்கும் செல்வது மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரியும்.
இதுதவிர வீடுவீடாக வந்து நாம் நாள்தோறும் வெளியேற்றும் குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்குகளுக்குக் கொண்டு செல்லும் பணியையும், இரவு நேரத்தில் வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியையும் மாநகராட்சி மேற்கொள்கிறது.
இப்படி சென்னை பெருநகரில் 5400 மெகா டன் குப்பை நாளொன்றுக்கு அப்புறப்படுத்தப்படுகிறது. இதற்குத் தீர்வு காண, கண்ட இடத்தில் குப்பை போடுவதை முதலில் குறைக்க முயல்வோமா?