

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பிரான்சை வீழ்த்தி வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டமானது கால்பந்து ரசிகர்கள் என்கிற எல்லையை கடந்து பலருக்கு பரவசமூட்டியது.
அதற்கு முக்கியக் காரணம், ‘முடியும்வரை ஆட்டம் முடிவதில்லை’ என்பதை ஆங்கிலத்தில் குறிக்க The game ain’t over till it's over என்பார்கள். அந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக அத்தனை சாகசமும், பதற்றமும், திருப்புமுனையும் நிறைந்த ஆட்டமாக அமைந்தது.
பிரான்சு இறுதியில் தோற்றாலும் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணியை அபாரமான 8 கோல்கள் மூலம் பிரான்சு வீரர் கிலியன் எம்பாப்பே வென்றார்.
மறுபுறம் ஒட்டுமொத்த நட்சத்திர வீரர் என்கிற புகழுடன் சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை அர்ஜெண்டினாவின் மெஸ்சி தட்டிச் சென்றார். அத்தனைக்கும் அப்பால் 2002-க்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே தொடர்ந்து உலகக் கோப்பையை வென்று வந்த சரித்திரத்தை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினா இம்முறை புரட்டிப்போட்டது.
இத்தகைய விளையாட்டுப் போட்டிகளை உற்று கவனிப்பதன் வழியாக மாணவர்கள் பல்வேறு வாழ்க்கைத் திறன்களை படிப்பினையாக பெற முடியும்.