

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த, ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்ந்த பதவி வகிக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளைத் தத்தெடுத்தெடுக்க ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது.
இதன் மூலம் அரசு பள்ளிகளின் முன்னாள் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர் பராமரிப்பு, சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், சுகாதாரமான கழிப்பிடங்கள், இணையதள வசதிகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட தங்களாலான நிதி நல்க முடியும் என்கிற புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகள் அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அவை மக்கள் பள்ளிகள் என்பதால் ஊர் கூடி தேர் இழுப்பது போன்று அரசு பள்ளிகளை அனைவரும் அரவணைத்தல் சாலச் சிறந்தது.
அதே நேரத்தில் மேலே கூறப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள் நிலைத்து நிற்க அவற்றை பராமரிக்கும் ஊழியர்கள் அத்தியாவசியம். குறிப்பாக தமிழக அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களும், காவலர்களும் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்படாதது நெடுநாள் பிரச்சினை. இதற்கும் சேர்த்து தீர்வு கண்டால் மட்டுமே இத்தகைய திட்டங்களின் நோக்கம் பூர்த்தி அடையும்.