

போலி ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தின் முகவர்கள் இருவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.23,700 பறித்த மோசடி புகார் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வரும் ஒரு மாணவி தனது சுயவிவரம், கல்வி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ரெஸ்யூம்-ஐ ஆன்லைன் வேலைவாய்ப்பு தளம் ஒன்றில் கடந்த நவம்பரில் பதிவேற்றி உள்ளார். சில நாட்கள் கழித்து அந்த வேலைவாய்ப்புத் தளத்தின் பிரதிநிதி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு பெண் அலைபேசியில் மாணவியிடம் பேசியுள்ளார்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.800 செலுத்தினால் பெருநிறுவனம் ஒன்றிலிருந்து மாணவிக்கு வேலைக்கான அழைப்பு வரும் என்று கூறியுள்ளார். அதை மாணவியும் பின்பற்றவே நிறுவனம் சார்பாக தொடர்புகொண்ட இன்னொரு நபர் மாணவிக்கு ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி அவருக்கு வேலை உறுதிபடுத்தியுள்ளார்.
அடுத்து மின்னஞ்சல் வழியாக வேலை செய்யத் தேவையான கணினி உள்ளிட்ட உபகரணங்களுக்கு ரூ.14,900, அவற்றை கொண்டு வந்து சேர்க்க ரூ.8000 என மொத்தம் ரூ.23,700-ஐ மாணவியிடமிருந்து பறித்துவிட்டார்கள். இறுதியாக விழித்துக் கொண்ட மாணவி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
எவ்வளவு திட்டமிடலுடன் இந்த மோசடி அரங்கேறியுள்ளது என்பதை கவனித்தீர்களா மாணவர்களே. டிஜிட்டல் மயமாகிவரும் உலகில் முன்பைக் காட்டிலும் பல மடங்கு எச்சரிக்கையுடன் இல்லாவிடில் உண்மைக்கும் போலிக்கும் இடையில்உள்ள வேறுபாட்டை காண்பது கடினம்.