

1.5 கோடி இந்திய சிறார்கள் போதைக்கு அடிமையாகி விட்டதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
10-17 வயதுக்கு உட்பட்ட இந்திய சிறார்களிடம் குடிப்பழக்கம், குட்கா உள்ளிட்ட அபாயகரமான போதை வஸ்து பழக்கம் பரவிவருவது 2018-ல் தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் கரோனா பெருந்தொற்று பரவலுக்கு முந்தைய காலகட்டத்தின் நிலை இது என்பதை கவனத்தில் கொள்வோம்.
ஏனெனில் பள்ளிக்கூடங்கள் செயல்படாமல் ஸ்தம்பித்துபோன கரோனா காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் போதை பழக்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். ஆசிரியர்கள், சமூக ஆரவலர்கள் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு இது கொண்டு வரப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழச்சி நடைபெற்றது.
மேலும் தமிழகத்துக்குள் போதை வஸ்துகள் நுழையாமல் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர்களுடனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு போதை தடுப்பு தொடர்பாக 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுபோட்டி, நாடகம் போன்ற வருமுன் காப்போம் நடவடிக்கைகளில் காட்டும் முனைப்பை ஏற்கெனவே போதைக்கு அடிமையாகி மீள முடியாமல் தவிக்கும் மாணவர்களை மீட்க அரசு முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.