

திருக்குறளின் 108 அதிகாரங்களில் இருந்து 15 மதிப்பெண்ணிற்கு மாணவர்களிடம் வினாக்கள் கேட்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை 3 மாதத்திற்குள் முடிக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலில் இடம்பெற்றிருக்கும் 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களை 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் படிக்கும் விதத்தில் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை 2017-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி அரசு பள்ளி பாடப்புத்தகங்களில் திருக்குறள் சேர்க் கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பிலும் சில அதிகாரங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து ஆண்டுதோறும் சில கேள்விகள் கேட்கப்பட்டும் வருகிறது. பாடப்புத்தகத்தின் பின்பகுதியில் இணைப்பு பாடமாக மாணவர்கள் தங்கள் விருப்பப்படி படிக்கும் வகையில் மீதம் உள்ளவை சேர்க்கப் பட்டுள்ளன. இந்நிலையில் கட்டாய பாடமாக 1050 குறள்களை மாணவர்கள் படித்து தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் சாதி, மத, தேச அடையாளங்களுக்குள் சுருங்காமல் மானுட சமூகத்துக்கான ஆகச்சிறந்த அற இலக்கியமாகவும் திகழ்கிறது திருக்குறள். ஆகவேதான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறள் நவீன காலத்திலும் 80-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அத்தகைய உலக பொதுமறையின் சுவையை மாணவர்களுக்கு ஊட்ட மாற்று வழிகளை கண்டறிய வேண்டுமே தவிர தேர்வு, மதிப்பெண் என்கிற பெயரில் திணிப்பதால் பயனுண்டா என்று அரசும், நீதிமன்றமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.