

கேரள அரசு நடத்தும் எழுத்தறிவு தேர்வில் 2018-ல் முதலிடம் பிடித்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயனி அம்மாவின் வாழ்க்கையைத் தழுவி வெளிவந்த குறும்படம் ஜப்பான் டோக்கியோ நகரின் பிரசித்தி பெற்ற சர்வதேச குறும்பட விருது வென்றுள்ளது.
தான் வயோதிகம் அடையும் வரை பள்ளிக் கூடத்தையும் படிப்பையும் அறிந்திடாதவர் கார்த்தியாயனி அம்மா. கேரளாவில் வசித்து வரும் இவர் இளம் வயதிலேயே கணவரை இழந்தார். வீட்டுப்பணி, கோயில்களின் வெளிப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.
பல அவமானங்களையும் இன்னல்களையும் சந்தித்தார். அதுவரை தனக்கு மறுக்கப்பட்ட கல்வி அறிவை இனியாவது பெற்றிட 96 வயதில் உறுதி பூண்டார். முதியோர் கல்வித் திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பில் சேர்ந்தார். ஒரே மூச்சில் படித்து எழுத்தறிவு தேர்வில் 100-க்கு 98 மதிப்பெண்கள் குவித்து நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தார்.
2020-ம் ஆண்டு மகளிர் தினத்தன்று மத்திய அரசு விருதளித்து மூதாட்டி கார்த்தியாயனி அம்மாவை கவுரவித்தது. இந்நிலையில் அவரது வாழ்க்கை ‘பேர்ஃபூட் எம்பரஸ்’ என்ற தலைப்பில் ஆவணப்பட பாணியில் 15 நிமிட குறும்படமாக எடுக்கப்பட்டு யூடியூபில் அண்மையில் வெளியானது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் டவுக் ரொனால்ட் படத்தை தயாரித்துள்ளார்.
விக்காஸ் கன்னா என்கிற தலைமை சமையல் நிபுணர் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்தியாவில் பள்ளிக்கல்வி இடைநின்றுபோன 50 லட்சம் சிறுமிகளை மீண்டும் பள்ளிக்கு வர வழைத்து சத்தான உணவும், சிறந்த கல்வியும் வழங்குவதற்கான திட்டத்தை இந்த படத்தை முன்வைத்து இயக்குநர் முன்னெடுத்துள்ளார். இதற்கு பலர் ஊக்கமும் உதவியும் அளித்து வருகின்றனர்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த ஆவண குறும்படத்துக்கு ஜப்பான் நாட்டு விருதும் கிடைத்திருப்பதுகல்வி அதிலும் பெண் கல்விக்கு உலகம் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கிறது என்பதற்கான சாட்சி.