

மூன்றாம் பாலினத்தவர்களின் நலனுக்காக பள்ளிகளில் பாலின - நடுநிலை கழிவறைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழக பள்ளிக் கல்வித்துறையை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது.
தன் பாலின ஈர்ப்பு கொண்டோர், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட சமூகத்தினரின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் அச்சமூகத்தினரை கண்ணியமாக குறிப்பிடுதல் தொடர்பான சொல்லகராதி தயாரிப்பு குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மூன்றாம் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இச்சமூக மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை சரிசெய்ய உளவியல் ஆலோசனை மையங்கள், அவர்களின் பயன்பாட்டுக்கு பாலின-நடுநிலை கழிவறைகள் ஏற்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவற்றை சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது.
கல்வியின் நோக்கம் மதிப்பெண்ணை அறுவடை செய்வதால் மட்டும் முழுமை அடைந்துவிடாது. தன்னையும், தான் வாழும் சமூகத்தையும் புரிந்து கொண்டு சமூகத்தோடு தன்னைப் பொருத்தி வாழப் பழகுதலே கல்வியின் பயனாக இருக்கும். தன்னைச் சுற்றி அன்றாடம் பார்க்கும், கேட்கும் எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாகப் பகுத்தறிவுச் சிந்தனையோடு ஒப்பிட்டு ஆராயும் ஆற்றல், இயற்கையை நேசித்தல், வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை போல சமூகத்தின் ஓர் அங்கமான மூன்றாம் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களைக் கண்ணியமுடன் நடத்த கற்றலும் கற்பித்தலும் அத்தியாவசியமானது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இதிலும் தடம் பதிக்கட்டும்.