

கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிந்துஜா- 1 என்ற தொழில்நுட்பக் கருவியை சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள கடற்பகுதிக்குள் 20 மீட்டர் ஆழத்தில் இந்த கருவி நிறுவப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. வேகமாக பாயும் கடல் அலையின் வீச்சில் ‘டர்பன்’ என்ற சுழலியை சுழற்றி, சிந்துஜா- 1 மூலம் தற்போது 100 வாட் மின்சாரம்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 மெகாவாட் மின்சாரம்வரை இதன் மூலம் தயாரிக்க முயல்வதாக இந்த ஆராய்ச்சியின் தலைவரான ஐஐடி பேராசிரியர் அப்துஸ் சமது தெரிவித் துள்ளார்.
இந்த திட்டம் மேலும் விரிவடைந்து வெற்றி அடைவதன் மூலம் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்வதில் இந்தியா புதிய தடம் பதிக்கும். உலகின் எரிசக்தி பற்றாக்குறைக்கு அற்புதமான மாற்றுத் தீர்வை கண்டுபிடித்தவர்கள் என்று பெருமையும் இந்தியா கொள்ள முடியும்.
பருவநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்த பசுமை எரிசக்தி மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 500 கிகா வாட் மின்சாரம் தயாரித்துக் காட்டுவோம் என்ற சவாலை இந்தியா ஏற்றிருக்கும் சூழலில் இத்திட்டம் நிச்சயம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் செய்யக் கூடிய புதிய ஆராய்ச்சிகளும், கண்டு பிடிப்புகளும் இதுபோலவே நாட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும், உலகிற்கும் நன்மை பயக்கும் விதமாகத் திகழ இன்றிலிருந்தே முயலுங்கள் மாணவர்களே!