

தமிழக பள்ளிகளில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 சதவீதத்தினரால் மட்டுமே தமிழ் மொழியை எழுத்துக் கூட்டி வாசிக்க முடிகிறது; தென்னிந்திய மாநிலங்களில் மொழி வாசிப்புத் திறனில் தமிழகம்தான் மிகவும் பின்தங்கியுள்ளது என்கிற அதிர்ச்சிகர தகவல் என்சிஇஆர்டி நடத்திய 2022-ம் ஆண்டுக்கான அடிப்படை கற்றல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு நாடு முழுவதும் உள்ள மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 86,000 பேரிடம் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தம் 2,937 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவை 336 பள்ளிகள். ஆசிரியர் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் நேரடியாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி தகவல்களை சேகரித்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களது பிராந்திய மொழிகளை குறைந்தபட்ச திறனுடன் வாசிக்கவும், எழுதவும் முடிவது இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இது மிகவும் கவலை அளிக்கும் செய்தியாகும்.
கரோனா காலத்தினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியாக மட்டுமே இந்த பின்னடைவை கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகிவிடும். இத்தகைய பாதிப்பை உணர்ந்தே எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, ‘ரீடிங் மாரத்தான்’ உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்தாலும் அவை நிரந்தர தீர்வாகிவிடாது.
தொடக்கப் பள்ளிகளில் திறனோடும் பொறுப்போடும் பயிற்று விக்கும் ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை என்பதே இதன் மூலம் பட்டவர்த்தனம் ஆகிறது.