

உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சைகை மொழியில் மாணவிகள் நிகழ்த்திக் காட்டும் காணொலி தமிழக பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய மரியாதை அளிக்கும் விதமாக இந்த காணொலி காட்சிப்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், 3% இடஒதுக்கீடு அளித்து, அவர்களதுகல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 பராமரிப்புத் தொகை, மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதி, வேலைவாய்ப்பின்மைக்கான உதவித்தொகை போன்றவை தமிழக அரசால் அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தபடியாக மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்லாமல் இல்லத்திலிருந்தே பணி செய்ய ‘நான் முதல்வன்’ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதியமுயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது உண்மையான உள்ளடக்கிய சமூகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கை ஊட்டுகிறது.
இருப்பினும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்குக் கல்வி நிறுவனங்களில் தனி கவனம் இதுவரை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழிப் பாடம் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் தெரிவித்தார். அதுவும் பூரணமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்போம்.