

விளையாட்டுத்துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. மொத்தம் 25 பேருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளில் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா உட்பட தமிழகத்தின் மூன்று வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதும் வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்துள்ளார்.
இவர்களில் கடந்த ஓராண்டில் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தவர் சென்னையைச் சேர்ந்த 17 வயது பிரக்ஞானந்தா. ஏனெனில் சதுரங்க விளையாட்டு உலகில் ஜாம்பவான்கள் கூட கண்டு மிரளும் உலக சாம்பியன் கார்ல்சனை பலமுறை வீழ்த்தியவர் இவர். இளம் வயதில் (12) கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர். அதேபோன்று சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்றார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ஆசிய செஸ் தொடரில், ‘நம்பர் 1’ இடம்பிடித்து தங்கப்பதக்கம் கைபற்றி எல்லோரையும் அசத்தினார்.
தனக்கு பெரிய வசதியோ, குடும்பப் பின்னணியோ இல்லை. அதனால் தன்னால் சாதிக்க முடியாது என்று தயங்கி ஒதுங்கி நிற்கும் இளம் மாணவர்களுக்கு பிரக்ஞானந்தா அற்புதமான முன்மாதிரி.
அதிலும் இதுவரை யாருமே சாதிக்க முடியாததை தான் சாதித்துக் காட்ட நினைப்பது ஒரு வகை என்றால்; உலகம் கண்டு நடுநடுங்கும் சாம்பியனை முறியடித்து புதிய சாதனை படைப்பது இன்னொரு வகை. இந்த இரண்டு சாதனைகளையும் நிகழ்த்தி அர்ஜுனா விருதுடன் மிளிர்கிறார்.