

பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாததை அப்படியே விட்டுவிட முடியாது என எச்சரித்துள்ளது.
பள்ளி மாணவிகள் மீது ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவிகள் உளவியல் சார்ந்தும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் முறையாக செயல்பட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடத்தப்பட்ட விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இது.
ஏற்கெனவே பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க ‘14417’ என்ற எண் தமிழக மாநில பள்ளிக் கல்வி புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உடனடியாக உதவ ஒரு குழு செயல்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், போக்சோ சட்டத்தின்படி பள்ளி தோறும்பாலியல் குற்றத் தடுப்பு குழு, நடமாடும் ஆலோசனை மையங்கள் நிறுவப்பட வேண்டும், மனநல ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தப்பட்டும் இதுவரை நடைமுறைக்கு வராதது கவலை அளிக்கிறது. இனியேனும் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்கட்டும்.