

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ‘கூடுதல் கல்வி குறித்த ஒன்றுபட்ட மாவட்ட தகவல் அமைப்பின்’ 2021-22 ஆண்டுக்கான அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 58,801 பள்ளிகளில் 17,579 பள்ளிகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏதுவான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பணியிடங்களில் சாய்தளப் பாதை, மின்தூக்கி, உரிய கழிப்பிட வசதிகளை தரைதளத்தில் அமைத்தல் போன்ற முன்னெடுப்புகள் தமிழகத்தில் கடந்த காலத்தில் ஓரளவேனும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலகவங்கி நிதியுடன் ரூ.1,763 கோடியே 19 லட்சத்தில் தொடங்கப்பட உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டு மற்றும் கலை போட்டிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக் கூடாது என்ற பரந்த நோக்கத்துடன் மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கெனவே பள்ளிகளில் சேர்ந்து படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சகஜமாக பயன்படுத்தும் வகையில் எத்தனை பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட்டுள்ளன, அதிலும் சாய்தளப் பாதை, கைப்பிடி மற்றும் சக்கரநாற்காலி பயன்படுத்தும் வகையில் எத்தனை பள்ளிக்கூடங்களின் கழிவறைகள் உள்ளன போன்ற கேள்விகளுக்கு 70% பள்ளிகளில் இல்லை என்கிற பதில்தான் கிடைத்துள்ளது. மாற்றுத்திறனாளிக்கான உண்மையான நேச கரம் நீளட்டும்.