

வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை அனுப்பி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாழ் போலி முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 45 பேரின் பாஸ்போர்ட்டுகள், 100 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கணினி, கார், மோட்டார் பைக் மற்றும் முக்கிய ஆவணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குவிந்து கிடப்பதாகச் சொல்லி பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுலா விசா வாங்கி தந்திருக்கிறார் இந்த போலி முகவர். கேள்வி எழுப்பியவர்களிடம் வெளிநாடு சென்றவுடன் வேலை அனுமதி விசா வாங்கித் தருவதாகப் பொய் வாக்குறுதிகள் அளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இத்தகைய போலி முகவர்களிடம் பள்ளிப் படிப்பை தாண்டிடாதவர்கள் மட்டுமல்ல பட்டம் பெற்ற இளைஞர்கள்கூட ஏமாறுவது பல காலமாக நடந்து வருகிறது. சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்வது சட்டத்துக்கு புறம்பானது. வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு முன்னதாக குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமளித்து அனுமதி பெற வேண்டும்.
குறிப்பாக பதிவு பெறாத முகவர்கள், தரகர்களிடம் சிக்கி பணத்தையும் வேலைவாய்ப்பையும் பறிகொடுத்துவிட்டு ஏமாற்றம் அடையாமல் இருக்க உரிய வழிகாட்டுதலை மாணவ பருவத்திலிருந்தே பள்ளிக்கூடங்கள் வழங்கிட வேண்டும். பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் முதலே முறையாக பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்யலாம்.