

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். நல்ல வேளையாக பள்ளி முடிந்து மாணவிகள் வீடு திரும்பிய பிறகு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெருத்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பரிதாபத்துக்கு இடமாக சுவர் அருகில் கடை நடத்திவந்த நடுத்தர வயது பெண்ணுக்கும், அருகில் வசித்து வந்த ஆணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் உட்பட பல வாகனங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அப்படியானால் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து அப்பள்ளி மாணவிகள் தப்பித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள 5,583 பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணியில் தமிழக அரசு உடனடியாக இறங்கும்படி கடந்த செப்டம்பர் மாதமே சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் ரூ.100 கோடி செலவில் அகற்றப்படும் பணி தொடங்கியிருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வி அமைச்சரும் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை நேரில் பார்வையிட கடந்த மாதமே தொடங்கிவிட்டார். இருப்பினும் மாநிலத்தின் தலைநகரிலேயே ஒரு பள்ளியின் சுவர் கவனிப்பின்றி சிதிலமடைந்துள்ளது என்பது பழுதடைந்திருப்பது சுவர் மட்டுமல்ல என்பதைதான் காட்டுகிறது.