

உலகை அடுத்ததாக ஆட்டிப்படைக்கப் போகும் வைரஸ் கிருமிகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச கூட்டத்தை உலக சுகாதார நிறுவனம் நடத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து 300 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட அவசியமான தடுப்பூசிகள், சோதனைகள், சிகிச்சைகள், அவற்றுக்குத் தேவைப்படும் முதலீடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
மீண்டும் ஒரு பெருந்தொற்றா என அச்சப்பட வேண்டாம் மாணவர்களே! வருமுன் காப்போம் எனச் சொல்வார்களே அதற் கான திட்டமிடல்தான் இத்தகைய கூட்டங்கள். ஏற்கெனவே 2017-ம்ஆண்டில் சர்வதேச அளவிலான வைரஸ் தாக்குதல் குறித்த முதல் கூட்டம் நடத்தப்பட்டு பட்டியலும் வெளியிடப்பட்டது.
அதனை அடுத்து 2018-ம் ஆண்டிலும் அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோவிட்-19 வைரஸ் தொற்று, எபோலா வைரஸ் காய்ச்சல், மார்பர்க் வைரஸ் காய்ச்சல், லாசா காய்ச்சல், மத்திய கிழக்கு சுவாசக்கோளாறு, சார்ஸ், நிப்பா வைரஸ், சிகா உள்ளிட்ட 25 விதமான வைரஸ் குடும்பங்கள் பட்டியலிடப்பட்டன. அதன் காரணமாகத்தான் கரோனா பெருந்தொற்று வீரியமாகப் பரவத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே அதிலிருந்து விடுபடுவதற்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டன.
கொள்ளை நோய்களிலிருந்து உலகை காக்கவும் மீட்கவும் அவசியமான ஆராய்ச்சிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வரும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாகத் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் வீற்றிருப்பதை இச்சமயத்தில் எண்ணி பெருமை கொள்வோம்.