

‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் பாதிப்பு தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 4000 முதல் 4500 நபர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 1.5 லட்சம் பேர்வரை ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பருவமழை தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர்முதல் வாரம் வரையிலும் வைரஸ் தாக்குதலினால் ‘மெட்ராஸ் ஐ' கண் நோய் பரவல் ஏற்படுவது வழக்கம். அதேபோன்றுதான் இந்த ஆண்டும் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை யாரை வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கக் கூடும்.
இந்த நோய் ஏற்பட்டால் கண்ணில் உறுத்தல், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். நோய் ஏற்பட்டுவிட்டால் கண்களை கையினால் தொடக் கூடாது. அப்படி தொட்டுவிட்டு அருகில் இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் பரவக் கூடும்.
எளிதில் பரவக் கூடிய நோய் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக கை வைத்தியம், பாட்டி வைத்தியம், சுயமாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துதல் போன்றவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது. உடனடியாக கண் மருத்துவரை அணுகி உரிய மருந்துகளை பெற்றுக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றினால் எளிதில் விடுபடலாம்.