

உலக குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலையத்தைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும், குழந்தைகள் உரிமை சட்டம் மற்றும் சமூக பொறுப்பு தொடர்பாக அவர்களுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றை நடத்த வேண்டும், காவல்துறை உயர் அதிகாரிகள் மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.
இவ்வாறு வரவழைக்கப்பட்ட மாணவர்கள் காவல் நிலையத்துக்குள் கவுரவமாக உட்கார வைக்கப்பட்டு அவர்களுடன் உயர் அதிகாரிகள் கலந்துரையாடியது தெரியவருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு சட்டத்தில் உள்ள உரிமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் பிற்காலத்தில் அவர்களும் காவல்துறை அதிகாரிகளாக உயர அத்துறை சார் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் நட்புடன் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள், காவல் நிலையம் என்றதுமே சிறியவர்களானாலும் பெரியவர்களானாலும் ஒருவிதமாக அச்சம் ஏற்படவே செய்கிறது. அதற்குக் காரணம் குற்றவாளிகள் மட்டுமே காவல் நிலையத்துக்குள் அடியெடுத்து வைப்பார்கள் என்கிற எண்ணம் இங்கு வேரூன்றிவிட்டது. இத்தகைய மடமையைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.