

உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் டிஜிட்டல் பயன்பாடு 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக 12-லிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கணினி, அலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிவிட்டது ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போக ஆன்லைன் கற்றல் முறைக்கு நகர வேண்டிய நிர்ப்பந்தம் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏற்பட்டது. கற்றல் இடைவெளியை தடுக்க கொண்டுவரப்பட்ட இத்தகைய இடைகால ஏற்பாட்டால் குழந்தைகள் ஆன்லைன் உலகிற்குள் அவசர அவசரமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதன் விளைவாக வழக்கமான பள்ளி நேரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கழிந்தது. அடுத்து தொற்று நோய் அச்சத்தால் வெளியே சென்று விளையாட அனுமதிக்கப்படாததால் விளையாட்டு நேரமும் ஆன்லைன் சார்ந்ததாக மாறியது. அக்கம்பக்கத்துக்கு சிறுவர்களுடனோ, உடன்படிக்கும் மாணவர்களுடனோ பேசி பழக முடியாமல் போனதால் தொடர்புக்கும் டிஜிட்டல் சாதனங்களை மட்டுமே பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டது.
மொத்தத்தில் குழந்தைகளின் உலகத்தை டிஜிட்டல் சாதனங்கள் அபகரித்துக் கொண்டன. இதன் விளைவாக உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை மாணவர்கள் பலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண, தினந்தோறும் குறிப்பிட்ட மணிநேரம் வீட்டில் ஒரு அறையில் அத்தனை டிஜிட்டல் சாதனங்களையும் தூர வைத்துவிட்டு பெற்றோர் குழந்தைகளுடன் ஆக்கப்பூர்வமாக நேரம் செலவழிக்க வேண்டும்.