

ராக்கிங் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வேலூர் சிஎம்சி கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் முதலாமாண்டு படிக்கும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்ததாக வீடியோ வெளியானதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தது. அதன் தொடர்ச்சியாக போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை இது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் தடுப்புக்குழு இருக்க வேண்டும், விடுதி காப்பாளர் எல்லா நேரமும் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும், கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், ராக்கிங் தடுப்புக்குழு உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும், ராக்கிங்கில் ஈடுபட மாட்டோம் என்று ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவரிடம் உறுதிமொழி படிவம் பெற வேண்டும் உள்ளிட்ட ராக்கிங் தடுப்பு சார்ந்த விதிமுறைகளை யுஜிசி நிர்ணயித்துள்ளது. இவற்றை நாட்டின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பின்பற்றியாக வேண்டும். இவற்றை மீறும் பட்சத்தில் ராக்கிங்கில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது யுஜிசி வரையறுத்துள்ள தண்டனைகளை அந்தந்த கல்வி நிறுவனங்களே நிறைவேற்ற வேண்டும். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறினால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் பெற்றோரும் காவல்துறையை அணுகும்போது அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி தேடித் தர வேண்டும்.