

இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 2022-ல் 6% அதிகரித்திருப்பதாக உலகப் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் நவ.6 தொடங்கிய சிஓபி27 பருவநிலை மாநாடு வரும் 18-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 198 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க மாசுபாட்டை குறைக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும், ஜீரோ நெட் கார்பன் வெளியேற்றம் போன்ற வழிகாட்டுதல்கள் வழக்கம் போல இந்த ஆண்டும் மாநாட்டில் முன்மொழியப்பட்டன.
இதற்கிடையில் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், உலகின் முதல் 125 பணக்காரர்கள் எரிபொருள், சிமென்ட் போன்ற மாசுபடுத்தும் தொழில்களில் செய்துள்ள முதலீடுகளினால் ஆண்டுக்கு 39 கோடியே 30 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் சராசரி மனிதனை விட பணக்காரர்களே பருவநிலை மாற்றத்துக்கு அதிகமாகக் காரணமாக உள்ளனர் என்கிற விவாதம் எழுந்தது. அடுத்ததாக கடந்த ஆண்டை விடவும் 2022-ல் அதிகமான கார்பனை இந்தியா வெளியேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தை இந்தியா உடனடியாகக் கட்டுப்படுத்த தவறினால் மற்றவர்களை விடவும் முதலில் மாணவர்களைதான் பருவநிலை மாற்றம் பாதிக்கும் என்பதற்குக் காற்று மாசுபாடு காரணமாக டெல்லி பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட அண்மை சம்பவமே சாட்சி.