

இன்றுடன் உலகின் மக்கள்தொகை 800 கோடி என்று ஐநாவின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2023-ல் உலக மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தை எட்டிவிடுமாம்.
இந்நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் மக்கள்தொகை பெருக்கத்தை இரு வேறு கோணங்களில் அணுகி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒருபுறம், நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, நமக்குள் குடிகொண்டிருக்கும் மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, மனிதர்களின் வாழ்நாளை நீடித்து, பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைத்திருக்கும் மருத்துவத்துறையின் அருமையை போற்றுவதற்கான தருணமாக இது; அதேநேரத்தில் நமது பூமியை காக்கும் கூட்டுப் பொறுப்புணர்வை பகிர்ந்து கொள்ள வேண்டிய, நமது பொறுப்பிலிருந்து எங்கே பின்தங்கி இருக்கிறோம் என்பதை சிந்திப்பதற்கான நேரம் இது என்று கூறியுள்ளார்.
அவரது கருத்து அனைவரின் சிந்தனைக்கும் உரியது மாணவர்களே. 800 கோடியில் ஒருவரான என்னால் என்ன செய்துவிட முடியும் என்று தோன்றலாம். இன்றைய நிலையில், அதீத பயன்பாட்டினால் முற்றிலுமாக தீர்ந்துபோகும் அபாய கட்டத்தில் உள்ள 6 இயற்கை வளங்களில் முதன்மையானது தண்ணீர். 2025-ல் உலகின் 200 கோடி மக்களின் பிரதான பிரச்சினை தண்ணீர் பற்றாகுறையாகத்தான் இருக்கும் என்று ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் நம் வீட்டிலும், பள்ளியிலும், நாம் அன்றாடம் சுற்றிவரும் தெருக்களிலும் இனி ஒரு துளி நீர் வீணாவதை அனுமதியோம் என்று உறுதிமொழி ஏற்போம் மாணவர்களே!