

தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட நோபல் பரிசாளர் வெங்கி ராமகிருஷ்ணன் இங்கிலாந்து நாட்டின் உயரிய அங்கீகாரமான ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிதம்பரத்தில் பிறந்து குஜராத்தில் பட்டப்படிப்புவரை படித்த பிறகு அமெரிக்கா சென்று உயிரியல் துறையில் உயர்கல்வி பெற்றார் வெங்கி ராமகிருஷ்ணன். பிறகு இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் தலைசிறந்த கல்வி நிறுவனமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சிக்கூடத்தின் தலைவராக உயர்ந்தார். அங்கு அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
அது மட்டுமில்லாமல் அறிவியல் உலகில் உயர்ந்த இடமான ராயல் சொசைட்டியின் தலைவராக 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை பதவி வகித்தார். அதன் அடுத்த கட்டமாக இங்கிலாந்து நாட்டின் ராணுவம், அறிவியல், கலை மற்றும் இலக்கியத் துறைகளுக்கு அளப்பரிய பங்காற்றியவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் ‘மெரிட் ஆஃப் ஆர்டர்’ விருது வெங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி தான் சென்ற இடமெல்லாமல் சிறப்பை தனக்கும், தான் பணிபுரியும் துறைக்கும் தேடித் தருபவர்கள்தான் நிஜமான ஹீரோக்கள்.
நீங்களும் பேரா.வெங்கி அடைந்த சிகரத்துக்கு இணையான உயரத்தை அடைய விரும்பினால் நீங்கள் முதலில் பற்றிக் கொள்ள வேண்டியது அவர் 2019-ல் இந்தியா வந்தபோது சொன்ன முக்கியமான சொற்களைதான். தாய்மொழியில் கற்றால் அறிவியல் எளிதில் புரிந்துவிடும் என்பதுதான் அது.