

பொறியியல் பாடப்புத்தங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே அண்ணா பல்கலையில் தமிழில் பிஇ படிக்க அனுமதி அளிக்கப்பட்ட பிறகும் பாடப்புத்தகங்கள் இதுவரை தமிழில் இல்லை. இந்நிலையில் அந்தப்பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அதேபோன்று பிஇ மட்டுமல்லாது எம்இ, பொறியியல் ஆராய்ச்சிக்கு உரிய அனைத்து புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
பிஇ படிக்க விரும்பும் பெரும்பாலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இது நிச்சயம் ஊக்கம் அளிக்கக்கூடிய செய்தியாகும். ஏற்கெனவே 2006-லேயே முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியால் அண்ணா பல்கலையில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் தமிழ்வழியில் தொடங்கப்பட்டன. அதன் பின் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலையின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட 13 கல்லூரிகளிலும் தமிழ்வழியில் இந்த இரு பாடப்பிரிவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள மற்ற பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி பாடத்திட்டம் இதுவரை நடைமுறையில் இல்லை. மறுபுறம் ஆங்கில வழியில் பிஇ படிக்கும் மாணவர்களுக்கே தொடர்பாற்றல் உள்ளிட்ட மென் திறன்களில் போதாமை இருப்பதால் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவிக்கின்றனர். இதில் தமிழில் பொறியியல் படிப்பவர்களுக்கு பணித்திறன்களை பயிற்றுவிக்கும் திட்டத்தையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.