

கல்வி என்பது லாபம் கொழிப்பதற்கான வியாபாரம் அல்ல, கல்விக்கட்டணம் என்பது எப்போதுமே மக்களால் செலுத்தக்கூடிய தொகையாக இருத்தல் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆந்திரா மாநில அரசு மருத்துவ படிப்புக்கான கல்விக்கட்டணத்தை ரூ.24 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய வாக்கியம் இது. மேலும் ஆந்திரா அரசுக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத் தக்கது. அதிலும் ரூ.35,000 முதல் ரூ.1 லட்சம்வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ4.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.13.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதேபோன்று பல தனியார் பள்ளிக்கூடங்கள் லட்சங்களில் கல்விக்கட்டணம் வசூலித்து வருவது நெடுங்காலமாக நடந்தேறி வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்களால் அவர்கள் விரும்பும் படிப்பையோ, கல்வி நிறுவனத்தையோ நெருங்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவனோ, மாணவியோ எதை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அவர்களது விருப்பமும் திறனும்தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களது குடும்ப பொருளாதார சூழல் காரணமாக இருப்பது சமூக நீதிக்கு எதிரானது.