

நாட்டின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி 106 வயதில் காலமானார். இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் செலுத்தி கடைசி மூச்சுவரை தனது ஜனநாயகக் கடைமையை ஆற்றிவிட்டு சென்றிருக்கிறார்.
இத்தனைக்கும் 10-வது வயதில்தான் பள்ளிக்குள் முதன்முறையாக சியாம் காலடி எடுத்துவைத்தார். தனது கல்பா கிராமத்திலிருந்து நீண்ட தூரம் நடந்தே சென்று ராம்பூரில் 9-ம் வகுப்புவரை பயின்றிருக்கிறார். அதற்குள் 20 வயதாகிவிட்டதால் 10-ம் வகுப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. கல்வி மீது கொண்ட தீரா காதலால் தான் படித்த பள்ளியிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெறும்வரை அங்கேயே பணியாற்றினார்.
இதற்கிடையில்தான் அவர் முதல் வாக்காளராக உதித்த சம்பவம் அரங்கேறியது. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது என்றால் 1951 அக்டோபர் 25 அன்றே கடுமையான பனிப்பொழிவு காரணமாக இமாசல பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அன்று பள்ளியில் தேர்தல் பணியாளராக சியாம் வீற்றிருந்தார். அன்றும் கடும் பனிப்பொழிவால் மக்கள் வாக்குச்சாவடி மையத்துக்கு வரவில்லை. வீடு வீடாக சென்று வாக்கு பதிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்து வாக்குச்சாவடிக்கு வரவழைத்தார். தனது வாக்கை முதன்முதலில் செலுத்தியதன் மூலம் தமது கிராம மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்மாதிரியாக உருவெடுத்து வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார்.