

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.37.66 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகளுக்கான கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேலும் 197 பேருக்கு ஆசிரியர் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வியில் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்வதாக உண்மை யாகவே பெருமிதம் கொள்ள வேண்டுமானால் நலப் பள்ளிகளின் நிலையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற தொடர் கோரிக்கைக்கு தமிழக அரசு தற்போது சற்றே செவிமடுத்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,138 நலப்பள்ளிகளில் படித்து வரும் 83, 259 மாணவர்களில் ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தற்போதைய முன்னெடுப்பால் பலனடையக் கூடும். அதேபோல இப்பள்ளிகளிலும் விடுதிகளிலும் உள்ள ஆசிரியர், வார்டன், விடுதிப் பணியாளர் இடங்களில் 50% நிரப்பப்படாமல் உள்ளன. பல நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என்கிற குற்றச்சாட்டை மலைப்பகுதி சமூகச்செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பிவருகின்றனர். எல்லாவற்றையும்விட பெரும்பாலான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவென்பதே கிடையாது என்கிற வேதனை தொடர்ந்து குரலற்றவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் தீர்வு காண்பதன் வழியாக அரசு பள்ளிகள் மட்டுமல்ல ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான நலப் பள்ளிகளும் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையா ளம் என்று நிலையைத் தமிழகம் விரைவில் எட்ட வேண்டும்.