

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ரூ.38 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நவம்பர் இரண்டாம் வாரம் முதல் புதுப்பொலிவுடன் இளம் வாசகர்களை வரவேற்க தயாராக இருக்கிறது. சென்னையின் அறிவுத்தொட்டில்களில் முதன்மையானது கோட்டூர்புரத்தில் வீற்றிருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம். தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நூற்றாண்டை ஒட்டி 2008-ல் இந்நூலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளில் 9 தளங்களாக பிரமாண்டமாகக் கட்டியெழுப்பப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் உருவெடுத்த குடிமைப்பணி அதிகாரிகள், இதழியலாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்களில் பலர் இங்குள்ள 6,20,000 நூல்களால் பட்டைத்தீட்டப்பட்டவர்களே. ஆனால், சரியான பாரமரிப்பின்றி சிதிலமடையத் தொடங்கியது. இந்நிலையில் புதிய கழிப்பிட வசதி, எல்இடி திரையிடல் வசதி, உயர்தர குளிரூட்டப்பட்ட வாசிப்பு அறைகள், நவீன நாற்காலிகள் ஆகியன தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைவிட முக்கியம், சர்வதேச புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள், எழுத்தாளர்களை அழைத்து சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சிறார் திருவிழா ஒன்றும் இம்மாதமே நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குழந்தைகளை வாசிப்பை நோக்கி ஈர்க்க மெய்நிகர் நூலகம், 3000 மின்புத்தக்கங்கள், கதைசொல்லி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் இத்தகைய நல்வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும்!