

பிரபல இளம் பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க், ‘தி கிளைமேட் புக்’ என்ற பருவநிலை குறித்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அடுத்த பத்தாண்டுகளுக்குள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால் உலகம் மிக மோசமான அழிவை சந்திக்க நேரிடும் என்பதை 100 சூழலியல் நிபுணர்களிடம் கட்டுரைகள் பெற்று அவற்றை தொகுத்து 19 வயது மட்டுமே நிரம்பிய கிரேட்டா துன்பர்க் புத்தகமாக லண்டன் இலக்கிய திருவிழாவில் வெளியிட்டிருக்கிறார்.
இதைவிடவும் வியத்தகு சம்பவம் அப்புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கேறியது. ஐநா சபை நடத்திவரும் பருவநிலை மாநாடுகளில் 15 வயதிலிருந்து கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து துணிச்சலான உரை வீச்சுகளை நிகழ்த்தி வந்திருக்கிறார் ஸ்வீடன் நாட்டு கிரேட்டா துன்பர்க். அது மட்டுமின்றி உலக பொருளாதார மன்றம் முதல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம்வரை சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்க உலகத் தலைவர்கள் என்ன செய்யவிருக்கிறார்கள் என்று உரத்தகுரலில் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், நவம்பர் 6-18 வரை எகிப்தில் நடைபெறவிருக்கும் ஐநா பருவநிலை மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் கிரேட்டா. அதற்கு அவர் வெளிப்படையாக சொன்ன காரணம்தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த மாநாடு அதிகாரத்தில் உள்ளவர்கள் நடத்தும் பித்தலாட்டம், மனித உரிமைகளை மீறும் தேசத்தில் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது என துணிச்சலாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இப்படி உண்மையை அதிகாரத்தின் முன்பாக பேசி செயல்படக்கூடிய இளையோரால் மட்டுமே உலகை புரட்டிப்போட முடியும்.