

குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டதால் துர்நாற்றம் வீசியபடி, கொசுக்களை பரப்பும் இடமாக கிடந்த சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் சென்னை மாநகராட்சியால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 30,000 சதுர அடியில் முன்மாதிரி விளையாட்டு பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அந்த பூங்காவில் சிறார் விளையாட்டு பகுதி, நடைப்பயிற்சி தடம், டென்னிஸ், வாலிபால் கோர்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தபடவிருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்கா ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகூளமாகக் கிடந்த ஒரு பகுதி சிறுவர் பூங்காவாக மாற்றப்படுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகத் தோன்றலாம். ஆனால் அந்த பகுதியை குப்பை மேடாக மாற்றியது யார் என்பதை நாம் முதலில் யோசிக்க வேண்டும். எனது குப்பையை முறையாக அப்புறப்படுத்துவேன் என்ற பொறுப்புடன் அப்பகுதி மக்கள் நடக்கத்தவறியதன் விளைவுதான் பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு நிலம் இவ்வாறு சீரழிந்துள்ளது. இதனால் அரை கோடி ரூபாய்வரை செலவிடும் நிலைக்கு அரசு அநாவசியமாக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் நாம் மலைபோல் கொட்டிவைத்திருக்கும் குப்பைகளை அகற்றி அந்த பகுதிகளை அழகுபடுத்தும் முயற்சியில் அரசு இறங்கினால் கஜானாவே காலியாகிவிடுமே. ஏற்கெனவே இவ்வாறு குப்பை அகற்றுகிறேன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட மேலும் பல பணிகள் வேறு முடிவடையாமல் உள்ளனவே. இனியேனும் எனது குப்பை எனது பொறுப்பு என உறுதியெடுப்போம்!