

தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மிகவும் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்படுவது தவிர வகுப்பறைகள், கழிப்பிடம், குடிநீர் வசதி, நூலகம், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கல்வித்தரம் குறித்து மாணவ, மாணவிகளிடமும் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்தும் அவர் செல்லும் பள்ளிகளில் எல்லாம் கேட்டறிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனுடன், பள்ளிகளின் உண்மையான நிலையைக் கண்டறிய முன்னறிவிப்பில்லாமல் திடீர் சோதனை நடத்தும் வழக்கத்துக்கு உயிரூட்ட வேண்டும்.
‘திடீர்’, ‘முன்னறிவிப்பில்லாமல்’ இந்த இரு சொற்களும் இங்கு மிகமுக்கியம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனது படைகளோடு எங்கே, எப்போது, எப்படி வருவார் என்பதையெல்லாம் சூசகமாகச் சொல்லிவிட்டு அதற்கேற்றார் போல் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களில் சிலரும் தங்களது கல்வித் தரத்தை (?) நிரூபித்துத் தப்பித்துக் கொள்ளும் ஒப்பு சோதனையை பற்றி பேசவில்லை. மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை, மாணவர்- மாணவிகளின் விகிதாச்சாரம், ஆசிரியர் வகுப்பெடுக்கும்போது நேரடியாக கண்காணித்தல், ரேகிங் தடுப்பு கமிட்டியின் செயல்பாடு, பாலியல் குற்றத்தடுப்பு கமிட்டியின் செயல்பாடு இப்படி பள்ளி சோதனையின் கீழ் இடம்பெறக்கூடிய அத்தனை அம்சங்களும் கறாராக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதில் கண்டறியப்படும் குறைகள் சமரசமின்றி களையப்பட்டால் மட்டுமே உண்மையாகக் கல்வித் தரத்தை உயர்த்த முடியும்.